Sunday, August 14, 2016

கவிதைகள் விரும்பும் கவிஞன்...நா முத்துக்குமார்...


நா முத்துக்குமார்...

கவிதைகள் விரும்பும் கவிஞன்...

"வேடிக்கை பார்த்தவன்"
அழவைத்து வேடிக்கை பார்க்கிறான்,

குழந்தைகள் நிறைந்த வீடு
இன்று உன் இறப்பினில்
வெறித்துப் போனது,

ஆனந்தயாழை மீட்டியவனே
அதன் தந்திகள் அறுத்தது யார்?

நீ சொன்ன...
"ஒரு மாலை இளவெயில் நேரம்"
இன்று இப்படிக் கொதிக்கிறதே...

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
என்று எழுதி அழ வைத்தவனே
இப்போது இறந்து நிறைவேற்றி
அழ வைக்கிறாயா...?

ஒரு பாதி கதவு நீ,
மறு பாதி கதவு நான்.
என்றாயே...
ஏன் கதவுகளை உடைத்தாய்...?

சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்
ஏன் சொல்லாமல் இறந்துவிட்டாய்?

தந்தை அன்பின் முன்னே
தெய்வங்கள் தோற்றேபோகுமென்றாய்,
உனை நோயிலிருந்து மீட்பதிலும்
தெய்வம் தோற்றதோ...?

கதைகளை பேசும் விழியருகே
கண்ணீரை ஏன் பேச வைத்தாய்?

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைக்கின்றதா !!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி சென்று விட்டதா...?

கல்லையும் கண்ணாடியையும்
மோதவிட்டு காதல் செய்தவனே
ஏன் இதயத்தில் இடி இறக்கினாய்?

நெஞ்சே எழு எனச் சொல்லி
ஏன் விழ வைத்தாய்...?

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டு
சந்தோசம் களவாடி எங்க போன...?

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
என எல்லாவற்றிலும் அழகு பார்த்தவனே
எங்கள் அழுகையிலும் அழகு தெரியுமோ...?

உன்வழித் தமிழ் கேட்டோம்...
இனி எவ்வழி உனைக் கேட்க...?

உன் உயிரைக் கொள்ள
விதிக்கு யார் உரிமை தந்தது....?