Sunday, August 14, 2016

கவிதைகள் விரும்பும் கவிஞன்...நா முத்துக்குமார்...


நா முத்துக்குமார்...

கவிதைகள் விரும்பும் கவிஞன்...

"வேடிக்கை பார்த்தவன்"
அழவைத்து வேடிக்கை பார்க்கிறான்,

குழந்தைகள் நிறைந்த வீடு
இன்று உன் இறப்பினில்
வெறித்துப் போனது,

ஆனந்தயாழை மீட்டியவனே
அதன் தந்திகள் அறுத்தது யார்?

நீ சொன்ன...
"ஒரு மாலை இளவெயில் நேரம்"
இன்று இப்படிக் கொதிக்கிறதே...

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
என்று எழுதி அழ வைத்தவனே
இப்போது இறந்து நிறைவேற்றி
அழ வைக்கிறாயா...?

ஒரு பாதி கதவு நீ,
மறு பாதி கதவு நான்.
என்றாயே...
ஏன் கதவுகளை உடைத்தாய்...?

சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்
ஏன் சொல்லாமல் இறந்துவிட்டாய்?

தந்தை அன்பின் முன்னே
தெய்வங்கள் தோற்றேபோகுமென்றாய்,
உனை நோயிலிருந்து மீட்பதிலும்
தெய்வம் தோற்றதோ...?

கதைகளை பேசும் விழியருகே
கண்ணீரை ஏன் பேச வைத்தாய்?

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைக்கின்றதா !!!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி சென்று விட்டதா...?

கல்லையும் கண்ணாடியையும்
மோதவிட்டு காதல் செய்தவனே
ஏன் இதயத்தில் இடி இறக்கினாய்?

நெஞ்சே எழு எனச் சொல்லி
ஏன் விழ வைத்தாய்...?

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டு
சந்தோசம் களவாடி எங்க போன...?

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
என எல்லாவற்றிலும் அழகு பார்த்தவனே
எங்கள் அழுகையிலும் அழகு தெரியுமோ...?

உன்வழித் தமிழ் கேட்டோம்...
இனி எவ்வழி உனைக் கேட்க...?

உன் உயிரைக் கொள்ள
விதிக்கு யார் உரிமை தந்தது....?

Thursday, August 11, 2016

ஒரு காதல் சாபம்...



அன்பிற்குரிய முன்னால் காதலியே... 
நீ ஏற்கவில்லை என்பதற்காக 
என் காதலின் நீளத்தில் 
அங்குலம் கூட குறையாது, 

காதல் என்பது...
புரிந்து கொள்ள வேண்டியது,
புரிய வைக்க வேண்டியதல்ல. 

விரிந்து கிடப்பது காதல், 
அதை விவரித்து விளக்குவதை விட
வேதனை வேறு  இல்லை,  

ஆம் பைத்தியக்காரன் நான்... 
உன் தேகத்தை நேசித்தவர்கள் மத்தியில்,
உன் நேசத்தை தேகத்தில் வைத்தவனல்லவா!!!

சாலைக் கடக்கையில் கூட 
கரம் படாமல் கண்ணியம் காத்தவனல்லவா!!! 

நீ கெஞ்சிய போதெல்லாம் 
கவிதையில் கொஞ்சியவனல்லவா!!! 

என் சோகங்களை தூரம்வைத்து 
உன் காதல்தோல்விக் கண்ணீருக்குத் 
தோள் கொடுத்துத் தேற்றியவனல்லவா!!! 

உன்னிடம் பொய் புனைந்தவர் மத்தியில்
மெய் மட்டும் உரைத்தவனல்லவா!!! 

காவல் நிலையத்தில் புகார் செய்...

இவன் என்னை உண்மையாய் காதலித்தவனென்று...

நல்நட்பு செய்தவனென்று... 

கண்ணியம் காத்தவனென்று...

காமக் கலப்படமின்றி காதல் புரிந்தவனென்று... 

என்(உன்) மனம் மாற வெறும் 
ஏழே வருடம் காத்திருந்தவனென்று... 

நட்பின் ஆண்மையும்,
காதலின் தூய்மையும், 
கெடாமல் காத்தவனென்று. 

எறும்பு ஊரக் கல்லும் தேயுமாம்-ஆனால்
கல்லினும் கடியதுன்னிதயம் எனக் 
கண்டுகொண்டேன் நான்... 

செவிடனின்  காதில் 
பண்ணிசைத்தென்ன பயன், 

விட்டுப் போறவளே...
உன் வாழ்க்கை ஒன்றும் 
கெட்டுப் போய்விடாது.
நலமாகவே வாழ்வாய்.

எனினும் ஒரு சாபம்...
என்றாவது ஒரு நாள் 
என் காதலுக்கு ஏங்குவாய்... 

Wednesday, May 4, 2016

மெய்த்தேடல்




திடுமென விழித்ததில்
தடைப்பட்டது...
நடுநிசி உறக்கம்.

உன் நினைவுக் கடப்பாரை
நெஞ்சக்குழி தோண்ட...
ஆழத்தில் கிடந்த நீ...
நீர் வந்த நிலமாய்...
நெஞ்சமேற்பரப்பில்
நிறைந்தாய்...

இன்னும் நீ
அப்படியேதானிருக்கிறாய்...
பால்முகம்,
பரவசமூட்டும் அழகு,
பரபரப்பற்ற குணம்,

கிணற்றுத் தூர்வாரலில்
கிடைத்த தொலைந்த பொருட்களாய்...
நம் காதல் நினைவுகள்
கிடைக்கத் தொடங்கியது...

முதல் சந்திப்பு,
இரண்டாவதற்கான காத்திருப்பு,
மூன்றாவதற்கான முயற்சி,
முன்மொழிவிற்கான ஒத்திகை...

நான் சொல்ல வந்து
சொல்லாமல் விட்டது,
நீ கேட்டுவிட்டு
கேட்காமல் போனது.

முயற்சி திருவினையானது...
கிடைத்தது காதல்!!!

காதல்,ஏக்கம்,
மோகம்,முத்தம்,
தனிமை,தவிப்பு,
காத்திருப்பு,
காதல் பரிசுகள்,
ஊடல்,கூடல்,
என எல்லாம் கடந்தோம்.

எங்கிருந்தோ வந்த
சந்தேகப் புயல்
மையம் கொள்ள...
காலம் நம்மைப்
புரட்டிப் போட்டது.

வருடங்கள் உருண்டோட
நீ வந்துவிடுவாயென்ற
நம்பிக்கையில்...
காத்திருந்தேன்...
காத்திருக்கிறேன்...
காத்திருப்பேன்...

வெள்ளை முலாம் பூசி
விடியத் தொடங்கியது
கருப்படர்ந்த கனத்த இரவு...

கோடிட்ட இடமாய்
நிரப்பப்படாமல்...
படுக்கையில் கிடந்தேன்
நான்....

Thursday, April 28, 2016

காதல் தண்டனை...






நெடுநாள் ஆசை
நேரினில் உனைப் பார்க்க...

காதினில் கேட்கிறது
உன் கால்கொலுசோசை.

தண்டனை போதும் அன்பே,
தனித்துத் தவிக்கிறேன்.

திரும்ப என்னிடம்
திரும்பிவிடு...

கொடுத்ததை கேட்கிற
பழக்கம் இல்லை
என்னிடம்...

இருக்கட்டும் இதயம்
பத்திரமாய் உன்னிடம்...

சோகத்தை கவிதையாய்
சொல்லிவிடலாம்,
வலியை வெல்வதெப்படி?

நினைப்பதை
சொல்லமுடியாமல்
தவிக்கிற வலி...
கொல்லப்படுவதை விட
கொடியது.

வந்தாய்...
உரிமை கொண்டாய்.

சென்றாய்...
உயிரைக் கொன்றாய்.

என் குழப்பமெல்லாம்...
ஏன் வந்தாய்?
ஏன் சென்றாய்?

காதல் அக்கறை...

நீ காட்டும் காதல்
அக்கறைக்காகவே
நான் தினம் பெறவேண்டும்
ஆயிரம் காய்ச்சல்,தலைவலிகள் ...


Tuesday, April 12, 2016

அம்மா.....

என் அம்மாவின்
சேலைத் தலைப்பில்
நான் தலை துவட்டினேன்....

என் மனைவியின்
துப்பட்டா தலைப்பில்
மகள் தலை துவட்டுகிறாள்....

பெண்கள் மாறினாலும்
அம்மாக்கள் அப்படியேதானிருக்கிறார்கள்






Wednesday, March 30, 2016

காதல் சொல்ல வந்தேன்





















விடியும்வரை இரவுக்குத் துணையாக 
முன்னிரவு முழுதும் விழித்துக்கிடந்து  
மூளையில் படிந்த வார்த்தைகளை 
கடிதமாய்....
காகிதத்தில்  முடிந்து 
முப்பது ஒத்திகைகள் முடித்து, 
அலுவலகம் அதற்கு விடுப்பளித்து
காலை முதலே 
கவனம் முழுதும் 
கடிகாரத்தில் குவித்து
முட்களை நகர்த்திப் பார்த்தும் 
மாலை விடிய யுகங்கள் பல ஆனது.
ஏகாந்த விரதம் இன்றுடன் முடிப்பதற்காய் 
அவள் வரும் பாதையில் 
அரைமணி நேர தவம் புரிய 
ஆறுகோடி அழகுடன் 
அவள் அருகில் வர 
அடைத்து வைத்திருந்த 
வார்த்தைகள் யாவும் 
திசைக்கொன்றாய் தெறித்து ஓட,
மூக்கின் மேல் விளைந்த வியர்வையில் 
மூன்றாவது முறை குளிக்க நேரவே 
இதயமும் துடிப்பதை நிறுத்தி ஏறக்குறைய 
இருபது நிமிடங்களானது,
இந்த முட்டாள் கொண்டுவந்த காதலை 
மொழிய முடியாமல் போகவே,
பரபரப்பு ஏதுமின்றி 
பாதகத்தி அவள் 
பார்வையிலையே மொழிந்து போனாள்,
களிப்பில் செய்வதறியாமல் 
எட்டிகுதித்து வானம் பிடித்து 
கையளவு சுருக்கி 
கண்காணா தொலைவில் வீசியதில் 
இருந்த இடம் தெரியாமல் 
தொலைந்து போயின-சில 
நிலாக்களும்,நட்சந்திரங்களும்.......


Thursday, March 17, 2016

கற்பனைக்காதலி...



நடுநிசியில் நீ வாழ்த்திய பிறகுதான்
நினைவுக்கு வந்தது...
இன்று நான் பிறந்தநாள் என

நீ பிறந்தநாளை
நினைக்கத் தொடங்கியதிலிருந்து,
மறக்கத் தொடங்கிவிட்டது
நான் பிறந்தநாள்.

எல்லோரின் வாழ்த்துக்களால்
என் பிறந்தநாள் அர்த்தப்பட்டது,
உன் வாழ்த்தால் தான்
என் பிறப்பே அர்த்தப்படுகிறது.

பிறந்தநாள் பரிசாக
எல்லோரும்...
எதைஎதையோ பரிசளிக்க,
நீ மட்டும்...
உன்னையும்,
உன் காதலையும்,
பரிசாக அளித்தாய்.

உன் வாழ்த்திலிருந்து
தொடங்கிவிட்டது...
என் வாழ்க்கை
.... 

காதலாற்றாமை....



காதலுக்கு....
அழகை மட்டும் முன்னிறுத்தி 
அறிவில் பின்தங்கி நிற்பவளே,
காதல்...
அழகில் தொடங்கி
அழகில் முடிவதில்லை.

....அழகில் தொடங்கி,
அன்பில் தொடர்ந்து,
பரஸ்பரம் புரிந்து,
சகலமும் பகிர்ந்து,
அர்ப்பணித்து,
அகமகிழ்ந்து,
காக்கவைத்து,
காத்திருந்து,
பரிதவித்து,
கசிந்துருகி,
கொஞ்சல் செய்து,
கெஞ்சவிட்டு,
கள்ளச் சந்திப்பில்
செல்லத் தொல்லையில்
மோகம் விட்டு
தேகம் தொட்டு,
எதற்கும் விட்டுக்கொடுக்காமல்,
எதையும் விடத் துணிந்து,
தோள் சுருங்கி
முடி நரைத்து
வாழ்வின்
கடைசி இருப்பு வரை
உறையவிடாமல்,
உலரவிடாமல்,(உலர்த்துதல்)
காத்து நிற்றலே காதல்

காதலின் சுவையறியாதவளே
சுகம் தெரியாதவளே
உன் காதலின் களிப்பை விட
வாழ்நாள் தனிமை
ஓர் வரமே....

Sunday, January 24, 2016

காதல் கடுப்பு....



தனிமையில்...
வெறுமையில்...
தவிக்கையில்
உன் நினைவு
நீர்வீழ்ச்சியில் தான்
நான் உயிர்  நனைக்கிறேன்,
என்னருமை  தேவதையே
அங்கே நீயும்
அப்படித்தானே
தவிச்சிகிட்டிருப்ப.....
அப்புறம் உனக்கென்ன கேடு?
வந்துத் தொலை...
"காதல் செய்வோம்"