Thursday, August 11, 2016

ஒரு காதல் சாபம்...



அன்பிற்குரிய முன்னால் காதலியே... 
நீ ஏற்கவில்லை என்பதற்காக 
என் காதலின் நீளத்தில் 
அங்குலம் கூட குறையாது, 

காதல் என்பது...
புரிந்து கொள்ள வேண்டியது,
புரிய வைக்க வேண்டியதல்ல. 

விரிந்து கிடப்பது காதல், 
அதை விவரித்து விளக்குவதை விட
வேதனை வேறு  இல்லை,  

ஆம் பைத்தியக்காரன் நான்... 
உன் தேகத்தை நேசித்தவர்கள் மத்தியில்,
உன் நேசத்தை தேகத்தில் வைத்தவனல்லவா!!!

சாலைக் கடக்கையில் கூட 
கரம் படாமல் கண்ணியம் காத்தவனல்லவா!!! 

நீ கெஞ்சிய போதெல்லாம் 
கவிதையில் கொஞ்சியவனல்லவா!!! 

என் சோகங்களை தூரம்வைத்து 
உன் காதல்தோல்விக் கண்ணீருக்குத் 
தோள் கொடுத்துத் தேற்றியவனல்லவா!!! 

உன்னிடம் பொய் புனைந்தவர் மத்தியில்
மெய் மட்டும் உரைத்தவனல்லவா!!! 

காவல் நிலையத்தில் புகார் செய்...

இவன் என்னை உண்மையாய் காதலித்தவனென்று...

நல்நட்பு செய்தவனென்று... 

கண்ணியம் காத்தவனென்று...

காமக் கலப்படமின்றி காதல் புரிந்தவனென்று... 

என்(உன்) மனம் மாற வெறும் 
ஏழே வருடம் காத்திருந்தவனென்று... 

நட்பின் ஆண்மையும்,
காதலின் தூய்மையும், 
கெடாமல் காத்தவனென்று. 

எறும்பு ஊரக் கல்லும் தேயுமாம்-ஆனால்
கல்லினும் கடியதுன்னிதயம் எனக் 
கண்டுகொண்டேன் நான்... 

செவிடனின்  காதில் 
பண்ணிசைத்தென்ன பயன், 

விட்டுப் போறவளே...
உன் வாழ்க்கை ஒன்றும் 
கெட்டுப் போய்விடாது.
நலமாகவே வாழ்வாய்.

எனினும் ஒரு சாபம்...
என்றாவது ஒரு நாள் 
என் காதலுக்கு ஏங்குவாய்...