Sunday, October 23, 2011

தீபாவளி

 

பட்டாசுகளை பார்த்து கொளுத்து பெண்ணே!!!
ஏனெனில்......
உன் விரல் பட்ட மகிழ்ச்சியில் 
ஊதுவர்த்திகளும் வெடிக்கக்கூடும். 

Wednesday, October 5, 2011

தண்டனை !!!


தவறு செய்தால்...
தண்டனை முத்தம் என்கிறாய்!!!
அப்படியெனில்...
இனி நம் வாழ்வின் 
ஒவ்வொரு நொடியும் 
என்னை தண்டிப்பதே 
உன் வேலையாக இருக்கும் 

Sunday, August 28, 2011

சந்தேகம்



உனை மழையில் பார்க்கும்போதெல்லாம் 
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.....
நனைகிறாயா....?
அல்லது 
நனைக்கிறாயா....?

                                       நானாவது உன்னை 
                                       நான்கு முறைதான் பார்த்தேன் -ஆனால் 
                                       நீயோ அதற்குள் 
                                       நான் பார்க்கிறேனா என  
                                       பத்து முறை பார்த்துவிட்டாய்.

Friday, July 1, 2011

பொய்

          images (7).jpg
நீ தேவதை போல் இருப்பதாக... 
உன் அம்மா சொல்வதெல்லாம் பொய்,
உண்மையில்... 
உன்னைப்போல்  தான்
தேவதைகள் இருக்கிறார்கள் 

Monday, June 27, 2011



ஏன் பெண்ணென்று பிறந்தாய்????
நீயோ.... 
பிறந்த நாளை கொண்டாடுகிறாய்.
நானோ.... 
நீ பிறந்ததால்தான் திண்டாடுகிறேன்.                                                       

Thursday, June 23, 2011

வெட்கம்


கிடைக்காது என்றாலும்-உன் 
வெட்கத்தைப் பார்க்கவே பல 
முத்தங்கள் கேட்கலாம்
                              -  ம.கோபி 

Wednesday, June 15, 2011


சமயங்களில்.....
உன் கோபம் தணிவதர்கே 
நான் முத்தமிடுகிறேன்-நீயோ
மேலும் பல முத்தங்களுக்காகவே 
கோபம் தனியாதவளாய்  நடிக்கிறாய் 

இப்படியெல்லாம் நம்மை 
விளையாடவைத்து 
வேடிக்கை பார்க்கிறது 
இந்த காதல் .......
                                        - ம.கோபி 

Monday, June 13, 2011

முடியாது...


               
                           நாள் முழுதும் - உனக்கு
                          விடாமல் விக்கல் எடுக்கிறது...
                          என்பதற்காகவெல்லாம்-உனை
                          நினைப்பதை நிறுத்திக்கொள்ள முடியாது

Thursday, June 9, 2011

அக்னி வெயில்


நீ...
குடை பிடித்துச் செல்வதால்
கோபத்தில் மற்றவர்களை
கொளுத்துகிறது....

சூரியன்..

Wednesday, June 8, 2011

உன் காதலனாய் இருந்து என்ன பயன்????


                                 உன் காதலனாய் இருந்து என்ன பயன்????
                                 நான் பரிசளித்த சேலை 
                                 என்னை விட உன்னை 
                                அதிகமாய் அணைத்திருக்கும் பொழுது...
                                 சொல்லடி 
                                 உன் காதலனாய் இருந்து என்ன பயன்... 



Tuesday, May 31, 2011


பூமிச் சந்தைக்கு 
விற்பனைக்கு வராத 
மூன்றாம் பிறையின் 
முன்மாதிரிகள் 
நீ 
வெட்டியெறிந்த 
நகத் துணுக்குகள் 



பொங்கல் கரும்புகளை 
பார்த்துச் சாப்பிடு பெண்ணே,
ஒருவேளை  
உன் இனிப்பிதழ்களை 
சுவைக்க நேர்ந்தால்.... 
கரும்புகளுக்கும் 
திடிரென 
பற்கள் முளைக்கக்கூடும் 

Friday, May 27, 2011

எனது இரவுகளும்,விடியல்களும்





கண்ணடிக்கும் தாரகைகள்
கண்டுகொள்ளாத வெண்ணிலா
ஊர சுற்றும் முகில் கூட்டம்
உயிர் தடவும் பனிகாற்று
வாலி,வைரமுத்து
இளையராஜா.ARR சகிதம்
மெல்லிசை பாடல்களின் அணிவகுப்பு
கற்பனை தீர்ந்துபோகவே
பாதி மட்டுமே எழுதிய கவிதைக்காகிதம்
பக்கத்தில் உறங்க
இயக்கமெல்லாம் முடங்கிவிட
இதயம் மட்டும் நிதம் துடிக்க
கடக்கத்தொடங்கியதொரு
சலனமற்ற இரவுப்பயணம்,
நடுநிசி
யாரோ வரும் சப்தம்
தலை கோதும் சுகம்,
நிடலத்தின் மீதொரு முத்தம்,
ஆர்பரித்து எழுந்துபார்த்தால்
அருகில் அவள்,
இப்போது ஏன் வந்தாய்,என் கேள்வி?
பார்க்கணும் போல இருந்தது வந்தேன் ,,,,
ஏன் வரக்கூடாதா? அவள் பதில் கேள்வி
கைகளை கிள்ளிப்பார்த்தேன்,
அட கனவா...
டேய்,தண்ணிய குடிச்சுட்டு படு
மனசு...
பின்தலையில் அடித்துக்கொண்டு-மீண்டும்
போர்வைக்குள் புதைந்தது உடல்,
காலைவேளை
சிற்றுண்டிக்கான காகத்தின் கரைசல்
குழம்பி கோப்பையுடன் அம்மா வந்தாள்,
பருகும் வேளையில்-மீண்டும்
அவள் நினைவுத்தீக்குச்சி,
ஒருவேளை அவள்
உண்மையாகவே வந்திருந்தாள்????
இனிப்புடன் தொடர்ந்த விகசிப்பு,
டேய் பகல்கனவு காணாம
அலுவலகம் கிளம்பு-மீண்டும்
அதிகார மனசு,
இப்படித்தான் என் ஒவ்வொரு
இரவுகளும்,விடியல்களும்.........




Friday, May 20, 2011

மழை....மழை மட்டுமல்ல.....



அலுவலக கோப்புகளுக்குள் 
புதைந்திருந்த வேளை...
யாரோ,சொல்லத் தெரிய வந்தது 
வெளியே நல்ல மழையாம்....

கோப்புகளை மூடி வைத்து 
காகிதத்தை விரிக்கையில்
கொட்டியது 
நினைவு மழை ...

சாளரக் கம்பியில் கைவைத்து பருகியதும்...
முழங்கால் நீரில் முழ்கி நீச்சல் பயின்றதும்...
மின்னல் புகைப்படங்களும்... 
பொருள் விளங்காத 
அர்ஜுனா அலறல்களும்....


காகித கப்பல் மூழ்கியதால் வந்த 
வெட்கங்களும் ,
வேடிக்கை அவமானங்களும்.... 

எதிர் வீடு நண்பனின் 
கப்பல் மூழ்கியதால் 
ஏற்பட்ட களிப்பும்,
செய்த கிண்டல்களும்..... 

அம்மாவின் 
சேலை துவட்டல்களும் 
செல்லத் திட்டுக்களும் 

பருவ வயது மழையில் ஆடிய
மட்டைப்பந்தாட்டமும்.... 

நண்பனோடு நனைந்தே 
கடந்த சாலைகளும்...

எதிர்ப்படும் கடைகளில் பருகும் 
எண்ணிலடங்கா தேநீர்களும்...

வேளை கிடைத்து 
வெளியூர் வந்த வேளைகளில் 
பெய்த மழையின்
ஏகாந்த நனைதல்களும் 
கரைத்து விட்ட கண்ணீர்களும்...

இவ்வாறாக 
இணைந்து இருந்தவர்கள் 
இயந்திர வாழ்க்கைச் சக்கரத்தில் 
மிதி பட்டுப் போனதால்-எங்களை  
இன்று 
யார் யாரோ 
அறிமுகம் செய்கிறார்கள்....




Friday, May 6, 2011


காதல் குறள்:

வழிமொழிதல் யார்க்கும் எளியவாம் -அரியவாம் 
காதலை முன்மொழியும் செயல் 

சேலைக் கொலை:

சுரிதார் அணிந்து வந்து 
கொன்றது போதாதென-இப்போது 
சேலை அணிந்து கொள்ள வருகிறாய்....
சொல்லிவிடு 
இப்படி என்னை வித விதமாய் கொல்வதற்கு-இன்னும் 
எத்தனை யுக்திகள் வைத்திருக்கிறாய் .....

பெரும் குழப்பம்:

அருகில் நீ...
எதிரில் நிலா....
இருவரில் யாரை ரசிப்பது ?
குழப்பத்தில் நான்....


அக்னி வெயில்:

நீ...
குடை பிடித்துச் செல்வதால் 
கோபத்தில் மற்றவர்களை 
கொளுத்துகிறது....சூரியன்...

ஒப்பனை:

ஒப்பனை செய்து செய்து என்ன பயன் ?
உன்னால்...
அழகு சாதனங்கள் 
அழகானது தான் மிச்சம்-அவற்றால் 
உன்னை உன்னைவிட 
அழகாக மாற்ற முடியவில்லை

புயல் காற்று:

உன் ஊரெங்கும் நேற்று 
புயல் காற்று வீசியதாமே..
ஓ..மாடிக் கொடிக்கம்பியில் 
தாவணி காயப்போடிருந்தயோ...?


Thursday, February 17, 2011

காதல் சொல்ல வந்தேன்







விடியும் வரை இரவுக்குத் துணையாக
முன்னிரவு முழுதும் விளித்துக்கிடந்து
மூளையில் படிந்த வார்த்தைகளை
கடிதமாய்
காகிதத்தில் முடிந்து
முப்பது ஒத்திகைகள் முடித்து
அலுவலகம் அதற்கு விடுப்பளித்து
காலை முதலே
கடிகாரத்தில் கவனம் குவித்து
முட்களை நகர்த்திப் பார்த்தும்
மாலை விடிவதற்கு யுகங்கள் பல ஆனது
ஏகாந்த விரதம் இன்றுடன் முடிப்பதற்காக
அவள் வரும் பாதையில்
அரை மணி நேர தவம் புரிய
ஆறு கோடி அழகுடன்
அவள் அருகில் வர
அடைத்து வைத்திருந்த வார்த்தைகள் யாவும்
திசைக்கொன்றாய் தெறித்து ஓட
மூக்கின் மேல் விளைந்த வியர்வையில்
மூன்றாவது முறை குளிக்க நேரவே
இதயமும் துடிப்பதை நிறுத்தி ஏறக்குறைய
இருபது நிமிடங்களானது
இப்படியாக
இந்த முட்டாள் கொண்டு வந்த காதலை
மொழிய முடியாமல் போகவே
பரபரப்பு ஏதுமின்றி
பாதகத்தி அவள் பார்வையிலேயே மொழிந்து போனாள்  
களிப்பில் செய்வதறியாமல்
எட்டி குதித்து வனம் பிடித்து
கையளவு சுருக்கி
கண்காணா தொலைவில் வீசியதில்
இருந்த இடம் தெரியாமல்
தொலைந்து போயின- சில
நிலாக்களும்,நட்சத்திரங்களும்.........